தவெக மாநாட்டில் கலந்து கொள்ளும் தேசிய தலைவர்கள்? விஜய்யின் மாஸ்டர் ப்ளான்
விஜய்யின் தவெக மாநாட்டில் யார் யார் கலந்து போகிறார்கள் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை வெளியிட்டதோடு, பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சி கொள்கைகள் அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
தவெக மாநாடு
காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் எழுப்பி பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநாட்டிற்கு தற்போது வரை அனுமதி கிடைக்காத நிலையில் மாநாட்டுக்கான வேளைகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
விஜய்யின் இந்த மாநாட்டை தமிழக அரசியல் களம் உற்று நோக்கி வருகிறது. மாநாட்டில் யார் யார் கலந்து போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய்க்கு சினிமா துறையிலே பெரிய நட்சத்திர ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் திரைத்துறையை சார்ந்தவர்கள் மாநாட்டில் பங்கேற்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு
மக்கள் நீதி மையம் கட்சி தொடக்க விழா மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமலஹாசன் வரவைத்து போல், விக்கிரவாண்டி மாநாட்டிற்கு விஜய்க்கு நெருக்கமான தேசிய கட்சி தலைவர்களை அழைத்தும் வரும் முயற்சியில் விஜய் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.
குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆந்திரா வெள்ள பாதிப்புக்குள்ளான நிலையில் சந்திரபாபு நாயுடு வருவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் மக்களவை தேர்தலோடு நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். இதற்கு விஜய் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி
முக்கியமாக காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை மாநாட்டில் பங்கேற்க வைக்க விஜய் விரும்புகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விஜய் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யை டெல்லி அழைத்து ராகுல் காந்தி பேசி இருந்தார்.
அப்போது, "நீங்கள் தமிழகத்தில் அதிக செல்வாக்குள்ள நடிகராக உள்ள நிலையில் தனி கட்சி துவங்கினால் அரசியலில் பெரிய எதிர்காலம் உண்டு" என ராகுல் காந்தி கூறியதாகவும், அதன் அடிப்படையில் தான் விஜய் கட்சி தொடங்கியதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி கூறி இருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகையை திமுக அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் இந்த மாநாட்டில் பங்கேற்றால் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.