நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதாவில் நிச்சயமாக கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
நீட் விலக்கு மசோதா
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதற்கெல்லாம் முக்கிய காரணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று சென்னை ராஜபவனில் இளநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர் ஆளுநர்.
கையெழுத்திட மாட்டேன்
அப்போது, அந்த கலந்துரையாடலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவில் நிச்சயமாக கையெழுதிடமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும் என சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்விற்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.