எங்கள் அணியின் வெற்றிக்காக உயிரையும் கொடுப்பேன் - யார் சொன்னது தெரியுமா?
ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள நிக்கோலஸ் பூரன் தனது கேரியர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி வீரர் நிகோலஸ் பூரனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது. ஏற்கனவே பார்ம் இன்றி தவித்து வரும் அவரை இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்க வேண்டுமா என ரசிகர்கள் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை சாடினர்.
இந்நிலையில் ஹைதராபாத் அணிக்காக முழு மூச்சுடன் விளையாட உள்ளதாக நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை. சர்வதேச போட்டிகளில் நான் சிறப்பாக செயல்படுவதை அனைவரும் பார்த்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை என் மீது மிகப் பெரிய முதலீடு செய்துள்ள அந்த அணிக்காக தம்மால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் என கூறியுள்ளார். அதற்கு காரணம் கடந்த வருடம் 7.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 12 போட்டிகளில் வெறும் 85 ரன்களை 7.72 என்ற படுமோசமான சராசரியில் எடுத்தார். அதிலும் குறிப்பாக அந்தப் 12 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டான அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார்.
இதனால் அந்த அணி பூரனை கழற்றி விட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த டி20 உலகக்கோப்பையிலும் அவர் மோசமாக செயல்பட்டார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை யாருமே வாங்க மாட்டார்கள் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3 போட்டிகளிலும் அசத்திய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்காக தனி ஒருவனாக போராடினார். அதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை வைத்த ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.