மனிதனாக இருப்போம்..சனாதன கருத்து தவறில்லை !! உதயநிதி ஸ்டாலின் உறுதி!!
சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை நேரில் சந்தித்து நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்திற்காக ஆதரவு கேட்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், சென்னை உயர்நீதிமன்றம் சனாதன விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்தை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசியதைவிட நான் தவறாக எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும், சட்டப்படி சந்திப்போம்" என்றார்.
அமைச்சராக இருந்துகொண்டு மதத்துக்கு எதிராக தவறாக பேசியதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது குறித்த கேள்விக்கு, "அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்குப் போய்விடும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். இளைஞரணி செயலாளர் பதவியும் அப்படித்தான். இவை எல்லாவற்றையும்விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே, சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்தார்.