இன்று Climax...17 திக்திக் நிமிடங்கள்....சாதனை படைக்குமா சந்திரயான் 3?
பூமியில் இருந்து தெரிந்திடாத நிலவின் தென்துருவ பகுதியில் இன்று இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகின் கவனமும் அதன் பக்கம் திரும்பியுள்ளது.
சந்திரயான் 3 பயணம்
இந்தியாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டம் தான் சந்திரயான். இதன் 3வது பகுதியான சந்திரயான் 3வது இன்று நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கவுள்ளது. இந்த திட்டத்தின் விக்ரம் லேண்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான 17 நிமிடங்கள்
நிலவில் தரையிறங்குவதை வெற்றிகரமாக செய்திட விஞ்ஞானிகள் தீவிரமான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் அந்த 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாகும். இது குறித்து இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் நிலவின் வட்ட பாதையில் சரியாக வலம் வந்தது மிக முக்கிய தருணங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
இதனை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், லேண்டர் நிலவில் தரையிறங்குவது தான் தற்போது மிகவும் சவாலான ஒன்று என கூறிய அவர், சரியான நேரத்தில் சரியான உயரத்தில் இருந்து இந்த லேண்டர் சாதனத்தை பயணிக்கவைக்க வேண்டும் என்றார்.
வெறும் 1.68 கீ.மீ வேகம் தான்
அதே போல சாதனத்தின் வேகமும் முக்கியமானதாகும் என குறிப்பிட்ட சோம்நாத், இந்த சந்திரயான் 3 திட்டத்தில் வேகத்தை குறைக்க முடியாததே மிகவும் பிரச்சனையாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். நிலவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் தரையிறங்கும் போது சரியான வேகத்தில், பிரேக் பயன்படுத்தி அந்த தூரம் 6.8 கிலோமீட்டராக குறையும் போது, லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள 4 இன்ஜின்களில் 2 நிறுத்தப்படும் என்றும் அது வேகத்தை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தரையிறங்குவதற்கான தகுந்த உத்தரவுகள் சரிபார்க்கப்படும் என்றும், நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் வேகம் வெறும் 1.68 கிலோ மீட்டர் அளவில் குறைக்கப்படும் என்றும், தரையிறக்கப்பட்டதும் லேண்டர் சாதனத்தில் இருந்து ரோவர் தனது ஆய்வினை மேற்கொள்ளும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.