முக்கிய செய்தி - இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது - பேச்சுவார்த்தையில் தோல்வி..!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நாளை பேருந்துகள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தை
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் போன்ற தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தன. இது பொங்கல் நேரம் என்பதால் இந்த போராட்டம் நடைபெற்றால் மக்கள் பெரும் அவதியை மேற்கொள்வார்கள் என்பதால், அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.
சென்னையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாத நிலையில், வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
பேருந்துகள் இயங்குமா..?
சங்கங்களில் இந்த முடிவை தொடர்ந்து, இன்று மீண்டும் சென்னை தேனாம்பேட்டையில் 3-வது முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்த நிலையில், நாளை அதாவது ஜன. 9 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.