பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் காட்டு யானைகள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்
இலங்கை அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அவல காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை உண்டு இறக்கும் யானைகள்
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அம்பாறை மாவட்டம்.
இங்கு உள்ள பல்லக்காடு என்ற கிராமத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை கடந்த 8 ஆண்டுகளில் உட்கொண்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன.

இறந்த யானைகளை பரிசோதித்ததில் குப்பை மேட்டில் உள்ள மக்காத பிளாஸ்டிக்கை அதிக அளவில் விழுங்கியிருப்பது தெரியவந்ததாக வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார்.
இலங்கையில் யானைகள் பெரிதும் போற்றப்படுகின்றன ஆனால் அவை அழியும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் முதல் யானைகள் கணக்கெடுப்பின்படி, 19 ஆம் நுாற்றாண்டில் 14 ஆயிரம் ஆக இருந்த எண்ணிக்கை 2011 ல் 6 ஆயிரமாக குறைந்துள்ளது.
பசியுள்ள யானைகள் குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளைத் தேடி, பிளாஸ்டிக் மற்றும் கடினமான பொருட்களை உட்கொள்வதால் அவற்றின் செரிமான அமைப்புகளை சேதப்படுத்தும் என்றும் புஷ்பகுமார தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு மண்டலங்களில் 54 குப்பைக் கிடங்குகள் உள்ளன. அவற்றின் அருகே சுமார் 300 யானைகள் சுற்றித் திரிவதாக அதிகாரிகள் கூறினர்.