பொள்ளாச்சி அருகே பயங்கரம் : காரில் சென்ற மின்சார ஊழியரை விரட்டி தாக்கிய ஒற்றை காட்டு யானை
பொள்ளாச்சி அருகே நவ மலையில் காரில் சென்ற மின்சார ஊழியரை ஒற்றை காட்டு யானை தாக்கியது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நவ மலையில் மின்சார வாரிய குடும்பத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஆழியார் அணையை நோக்கி வனத்தை விட்டு காட்டு யானைகள் நீர் பருக வருகின்றன.
கடந்த ஒரு மாதமாக கேரளாவிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளான சின்னார்பதி, வால்பாறை சாலை, நவமலை சாலையில் இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகலிலும் நடமாடி வருகிறது.
நேற்று மாலை நவமலை சென்ற அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை துரத்தி தாக்க முயற்ச்சிக்க, சுதாரித்துக்கொண்டு பேருந்தை வேகமாக ஓட்டுனர் ஒட்டியதால் இதில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர்.
இதையடுத்து ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட ஒற்றை காட்டு யானை மின்சார வாரிய ஓட்டுநர் சரவணன் நவமலை நோக்கி காரில் சென்றபோது காரை தாக்கி வன பகுதியில் தூக்கி எறிந்தது.
பின்னர் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சரவணனை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நவமலையில் உள்ள பொது மக்கள் இரவுநேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.