உணவு தேடி வந்து கிணற்றில் தவறி விழுந்த கரடி - பொதுமக்கள் உதவியுடன் மீட்புப்பணிகள் தீவிரம்
இரை தேடி வந்து கிணற்றில் விழுந்த கரடியை மீட்க தீயணைப்புத்துறை நீண்ட நேரமாகப் போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்து சுமார் ஆயிரத்து 1030 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தூர் காப்புகாடு பகுதி உள்ளது.
இந்த காட்டுப் பகுதியில் சிறுத்தைகளும் கரடிகளும் ஆந்திரா காட்டு பகுதிகளில் இருந்து இரை தேடி அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த வெளக்கல் நத்தம் ஊராட்சி வீர கவுண்டனூர் பகுதியிலுள்ள சின்ன தம்பி மகன் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 30 அடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது.
அந்த கிணற்றின் வழியாக சென்ற பொதுமக்கள் எதேச்சையாக கிணற்றுக்குள் எட்டி பார்த்தபொழுது கரடி ஒன்று தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்து கொண்டிருப்பதை கண்டனர்.
பின்னர் வெலக்கல் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தனுக்கு தகவல் தெரிவித்தன்பேரில், அனுமந்தன் உடனடியாக வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோவிற்கும் நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறை அலுவலர் கலை மணிக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோ மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை அலுவலர் கலைமணி ஊர் பொது மக்கள் ஒத்துழைப்புடன் கரடியை மீட்க நீண்ட நேரமாகப் போராடி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.