கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய பெண் - அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் அருகே கள்ளகாதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் கோபால் (37) என்பவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இதனிடையே கடந்த மே 4 ஆம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கடை அருகே நின்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது. ’
பின்னர் பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த கோபாலின் மனைவி சுசீலாவும், மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களாக தொடர்ந்த பழக்கத்தால் மாரீஸை திருமணம் செய்து கொள்ள சுசீலா கூறியுள்ளார். மேலும் இடையூறாக உள்ள கணவர் கோபாலை கொலை செய்யலாம் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையை ரூ.6 லட்சம் பேசி வரவழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி கோபால் வேலையை முடித்து வீடு திரும்பும் போது ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சுசீலாவின் கள்ளக்காதலன் மாரீஸ், கூலிப்படையை சேர்ந்த விஜய், மணிகண்டன், உலகேஸ்வரன், மதன்குமார், விநோத் ஆகியோரை காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோபாலின் மனைவி சுசீலாவை தேடி வந்த நிலையில் இன்று பல்லடம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.