கணவர் தலையில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை - மனைவி வெறிச்செயல்
நாமக்கலில் குடும்பத் தகராறில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்த டெய்லர் தங்கராஜ் தனது மனைவி செல்வராணியுடன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் மனைவி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்தும் தங்கராஜ் குடித்து வந்தது செல்வராணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மாலையில் போதையில் வந்த தங்கராஜ் பலகாரம் செய்து கொண்டிருந்த செல்வராணியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து தங்கராஜின் தலைமீது ஊற்றியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறிய தங்கராஜ் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராணியைக் கைது செய்தனர்.