கணவனை ஜீவசமாதி ஆக்கிய மனைவி - விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி
சென்னையில் தந்தையை ஜீவசமாதி ஆக்கியதாக தாய் மீது மகள் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களது மகன் துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நாகராஜ் குறி சொல்லி சாமி ஆடுவதை தொழிலாக கொண்டிருந்திருந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவி லட்சுமியிடம் தான் சாக போவதாகவும், தன்னை வீட்டின் கொல்லைபுறத்தில் உள்ள குழியில் ஜீவ சமாதியாக புதைத்து விடுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து லட்சுமி, கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரை உயிருடன் பள்ளத்தில் படுக்க வைத்து மூடியுள்ளார். வேலைக்குச் சென்ற மகள் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தந்தை எங்கே என தாயிடம் கேட்க லட்சுமி வெளியே சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரண்டு நாட்களாகத் தந்தையைக் காணாததால் மீண்டும் தாயிடம் கேட்டுள்ளார்.
அப்போது நடந்த சம்பவத்தை மகள் தமிழரசியிடம் லட்சுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், நாகராஜ் உயிருடன் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.