காதல் கணவர் இறந்த அதே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கணவர் இறந்த துயரம் தாங்காமல் கழிவறையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் ரமேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் இருந்து இளவபட்டு அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். அப்போது விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிளியனூர் போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ரமேஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரது மனைவியான சரளாவிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துமனையில் இருந்த அவரது மனைவி தனது கணவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அங்கிருந்த கழிவறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அங்கிருந்து மீட்கப்பட்ட சரளா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவனின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.