கணவனின் இரண்டாவது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி, உதை: கள்ளக்காதலியுடன் கணவர் கைது
ஆவடியை அடுத்த கண்ணபாளையம், கிருஷ்ணர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவர், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (28). இவர்களுக்கு திருமணமாகி 9ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில், ராஜேஷ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி (19) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி ராஜேஷ், ஸ்ரீதேவியை அழைத்துக்கொண்டு திருத்தணி கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்கள் இருவரும் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதன் பிறகு, அவர்கள் இருவரும் நேற்று மதியம் ஆவடி திரும்பி உள்ளனர். இந்த தகவல் தெரிந்த பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டிருந்தனர். இதனை அறிந்த பவித்ரா, அங்கு வந்து ராஜேஷை தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர், இருவரும் சேர்ந்து பவித்ராவை அவதூறாக பேசி அடித்துள்ளனர்.
இது குறித்து, பவித்ரா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 2வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட என்னை அடித்த கணவர் ராஜேஷ் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஸ்ரீதேவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் பிறகு போலீசார் ராஜேஷ், ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் இன்று மாலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.