இறந்த கணவரின் விந்தணுவிற்காக போராடிய மனைவி - காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்
விபத்தில் இறந்த கணவரின் விந்தணுவை சேமிக்க வேண்டுமென மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
சாலை விபத்து
மத்தியபிரதேச மாநிலம் ரேவாவை சேர்ந்த ஜிதேந்திர சிங் கஹர்வார், கடந்த இரு நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மனைவி கோரிக்கை
ஜிதேந்திர சிங் மரணமடைந்தது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவர், பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து காவல்துறையினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, அவர் வைத்த வினோத கோரிக்கையை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதாவது தனது கணவரின் விந்தணுவைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அந்த விந்தணுவை வைத்து எதிர்காலத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொண்டு கணவரின் நினைவிலே வாழ உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர் விளக்கம்
இது தொடர்பாக தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் ரஜ்னீஷ் குமார் பாண்டே கூறுகையில், "இறந்த ஒருவரின் விந்தணுவைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அது உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் எடுத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் முடியாது. மேலும், இந்த மருத்துவமனையில் விந்தணுவை சேமிக்கும் வசதி இல்லை என தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கூறியதை கேட்டு கதறி அழுத ஜிதேந்திர சிங்கின் மனைவியை அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி பிரதே பரிசோதனைக்கு சம்மதிக்க வைத்தனர்.
அந்த பெண்ணுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகியுள்ளதால் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார், அவர் கோரிக்கையில் தவறில்லை. அவர் காலம் தாமதிக்காமல் முன்னரே கூறி இருந்தால் முயற்சி செய்திருப்போம் என மருத்துவர் அதுல் சிங் கூறியுள்ளார்.