அவள் மூஞ்சிய பார்த்ததும் கோபம் வந்தது... மார்பில் சரமாரியாக குத்திக் கொன்றேன் - கொடூரக் கணவன் அளித்த வாக்குமூலம்
தண்டையார்பேட்டை வஉசி நகரைச் சேர்ந்தவர் தளபதி. இவர் கப்பலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மூத்த மகன் இளம்பாரதி கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அருண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் ராயபுரத்தில் வசித்து வருகிறார் . தளபதி மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனைவி, மகன்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் தளபதி. அப்போது, மனைவியிடம் சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார். வேலைக்கு போகாமல் இப்படி தினமும் குடித்துவிட்டு வரும் உனக்கெல்லாம் சாப்பாடு ஒரு கேடா என்று திட்டியுள்ளார் சண்முகப்பிரியா.
இதனையடுத்து, அவருக்கு சாப்பாடு போட்டு வைத்துவிட்டு அறைக்குள் போய் கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார் சண்முகப்பிரியா. ஆத்திரத்தில் இருந்த தளபதி சாப்பிட்டு முடித்ததும், படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, மனைவி படுத்துக் கிடந்ததை பார்த்ததும் கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த மகன் வீட்டுக்குள் வர, அலறல் சத்தம் கேட்டு அருகில் ஓடி பார்த்துள்ளார். அங்கு தந்தை கத்தியால் தாயை குத்தியதை பார்த்து ஓடிப்போய் கத்தியை தட்டி விட்டுள்ளார். அடுத்த நிமிடம் அங்கிருந்து தளபதி தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் மகன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாயை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். ஆனால், சண்முகபிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தளபதியை தேடி வந்தனர். சுனாமி குடியிருப்பில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சென்று கைது செய்தனர். இதனையடுத்து, காவல் நிலையத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தளபதி அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவியின் முகத்தைப் பார்த்ததும் எனக்கு கோபம் அதிகமானது. அதனால் பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து என் மனைவியின் மார்பில் சரமாரியாக குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.