மனைவியை கொலை செய்த 3வது கணவர்... இரவு முழுவதும் ஆண்நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம்

Attempted Murder
By Petchi Avudaiappan May 19, 2022 07:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

விருதுநகர் அருகே பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன் கோவில் ராஜீவ் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமணன்-காளீஸ்வரி தம்பதியினர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வீடுவாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதனிடையே கடந்த மே 14 ஆம் தேதி காளீஸ்வரி தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் உடலில் ரத்தகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிருஷ்ணன் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டதோடு கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதேசமயம் காளீஸ்வரியின் கணவரையும் காணாததால் அவரையும் பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.  இதனிடையே செல்போன் சிக்னலை கொண்டு சிவகாசி ஜமீன்சல்வார் பட்டி அருகே பதுங்கியிருந்த கணவர் லட்சுமணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சுமணன் காளீஸ்வரியின் மூன்றாவது கணவர் ஆவார். அதேபோல் லட்சுமணனுக்கு காளீஸ்வரி இரண்டாவது மனைவியாவார். இருவருக்கும் ஓராண்டாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக சேர்ந்துவாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் காளீஸ்வரி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், இதனை லட்சுமணன் கண்டித்தும் அவர் கண்டுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முழுவதும் ஆண்நண்பர் ஒருவருடன் காளீஸ்வரி செல்போனில் பேசியதால் லட்சுமணனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் காளீஸ்வரியை வீட்டில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.