கணவன் சம்பாதித்த சொத்தில் மனைவிக்கு பங்கு உண்டு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்தியாவில் பெண்களுக்கு வாரிசு சொத்தில் பங்கு கொடுக்கும் சட்டம் இருக்கும் நிலையில், குடும்ப உழைப்பில் ஈடுபட்டு சம்பளம் பெறாத பெண்களுக்கு கணவன் ஈட்டிய சொத்தில் சமபங்கு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவன் தொடங்கிய வழக்கு
வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் உரிமையில்லை என கூறி கணவன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது எனவும், குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால் தான் கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு
குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம் குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஒரு குடும்ப வாகனத்தில் இரட்டை சக்கரங்கள் கணவன் மற்றும் மனைவி என நீதிபதி குறிப்பிட்டார்.
கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால் சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.