தட்டிலிருந்த உணவை எடுத்த மனைவியை தாக்கிய கணவன்...
சென்னையில் தனது தட்டிலிருந்த உணவெடுத்து குழந்தைக்கு ஊட்டிய மனைவியை கணவன் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் திருவெங்கையா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் என்பவர் மனைவி ஹரிதா மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். . இதனிடையே கடந்த 13 ஆம் தேதி வேலையை முடித்து வீட்டிற்கு வந்த கிரிதரனுக்கு ஹரிதா உணவு பரிமாறியுள்ளார்.
கிரிதரன் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவரது தட்டிலிருந்த உணவை எடுத்து தனது இரண்டரை வயது குழந்தைக்கும் ஹரிதா ஊட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிரிதரன் ஆபாசமான வார்த்தைகளால் ஹரிதாவை திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில் ஹரிதாவின் பற்கள் உடையவே கோபமடைந்த அவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கணவர் கிரிதரன் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் கிரிதரன் மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், காயப்படுத்துதல், மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கிரிதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.