வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடையே கடும் மோதல் - அணியில் இருந்து பொல்லார்டு நீக்கப்பட்டதன் பின்னணி
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு அதிரடியாக நீக்கப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதனிடையே நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார்.
பொல்லார்டிற்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை என கூறப்பட்ட நிலையில் வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த மாதம் அயர்லாந்தக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. இதில் 3 போட்டியில் பேட்டிங் செய்த பொல்லார்டு மொத்தமாகவே 4 ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.
ஆனால் தோல்விக்கு இளம் வீரர்கள் தான் காரணம் என்று பொல்லார்டு செய்தியாளர் சந்திப்பில் கூற அதற்கு அவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது பெரும் பிரச்சனையாக அணியில் அப்படி ஏதும் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இதில் கேப்டனாக செயல்பட்ட பொல்லார்டு மோசமாக பேட்டிங்கில் கோல்டன் டக் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனாலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.