இவ்ளோ பாதுகாப்பு இருந்தும் என்ன பயன்? பாகிஸ்தான்-மே.இ.தீ தொடர் நடக்குமா? - ரசிகர்கள் கவலை

pakistan west indies chase cottrell mayers positive for covid
By Swetha Subash Dec 12, 2021 06:33 AM GMT
Report

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையின் முடிவுகள் வந்துள்ளதால் பரபரப்பாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் சென்றிருந்தனர்.

முதல் டி20 போட்டி நாளை கராச்சியில் தொடங்கவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வீரர்கள் மூன்று பேரும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மே.இ.தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சியில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த 3 வீரர்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,

“பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சிப்பிரிவில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார்கள்.இந்த 4 பேருமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை இருப்பினும் தொற்று இருக்கிறது.

இந்த நால்வரும் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தொடரில் எந்த வித மாற்றமும் இல்லை. மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் உறுதியானது.

கரீபியன் கிரிக்கெட் லீக் தொடங்கும் முன்பாகவே வீரர்கள் பெரும்பாலும் பயோ-பபுள் சூழலுக்குள்தான் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்றால் எங்களின் பாகிஸ்தான் பயணம் பாதிக்கப்படாது. இருப்பினும் 3 வீரர்கள் விளையாடமுடியாதது பெரும் இழப்புதான்” என்று கூறியுள்ளது.