கேரள போலீசை எப்படி நம்ப முடியும்: உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி
மோசடி நபருடன் தொடர்பு வைத்துள்ள கேரள போலீசை எப்படி நம்ப முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல் என்பவர் கொச்சி கலூரில் பழங்கால அரிய வகை புராதான பொருட்கள் விற்பனை செய்யும் அருங்காட்சியகம் நடத்தி வந்தார். இவர் தன்னிடம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திப்புசுல்தான் அரியணை, வாள், இயேசுவை காட்டிக்கொடுப்பதற்காக கொடுத்த 2 வெள்ளிக்காசுகள், இயேசுவின் ரத்தக்கறை படிந்த உடையில் இருந்த நூல் பயன்படுத்தி செய்த ஜெபமாலை, குரான் உள்பட அரிய பொருட்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
இவரது அருங்காட்சியகத்துக்கு டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்இ டிஐஜி உள்பட ஏராளமான போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து கைப்படம் எடுத்துள்ளனர். இதனிடையே மோன்சன் மீது மோசடி புகார் கூறப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மோன்சனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்ததால், போலீசாரிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, அவரது முன்னாள் டிரைவர் அஜித் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள போலீசை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
மோன்சனுக்கும், அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு மோசடி ஆசாமிக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது அந்த நபர் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இதன்மூலம் அவரிடம் மக்கள் ஏமாந்துள்ளனர். எனவே மோன்சன் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மோன்சனுடன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள ஆசாமியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள போலீசாரை எப்படி நம்ப முடியும். அப்படி இருக்கும்போது கேரள போலீசார் விசாரணை நடத்தினால் உண்மையான தகவல் வெளிவருமா என்பது சந்தேகம் தான் என்று நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.