தமிழ்நாடு நாள் - ஜூலை 18 கொண்டாடுவதற்கான வரலாற்று காரணம் என்ன?
ஜூலை 18 ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதற்கான வரலாற்று காரணத்தை காணலாம்.
மெட்ராஸ் மாகாணம்
சுதந்திரத்திற்கு முன்பு வரை, மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த இன்றைய தமிழ்நாட்டு நிலப்பகுதி கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி, மெட்ராஸ் ஸ்டேட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குடியரசாக இந்தியா உருவெடுத்த பிறகு, தங்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல் எழ தொடங்கியது.
தெலுங்கு பேசும் மக்களுக்கு என மொழிவாரி மாநிலமாக ஆந்திராவை உருவாக்க வேண்டுமென 19-10-1952 அன்று பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார். இதன் பின் 1953 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவிப்பு வெளியிட்டார். இதன்தொடர்ச்சியாக பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
சங்கரலிங்கனார்
இப்படிப்பட்ட சூழலில் தான் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்தது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், 1956 ஜூலை 27 ம் நாளன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக்கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஆனால் அன்றைய முதல்வர் காமராஜர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். இருந்தும் பின்வாங்காமல்தொடர்ச்சியாக 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 1956 அக்டோபர் 13 அன்று மரணமடைந்தார். இதற்காக திமுக சார்பில் பல முறை சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பால் அந்த தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.
அண்ணா
தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். பெயரில் என்ன இருக்கிறது மாநிலத்துக்கு பெயர் மாற்றம் செய்வதில் என்ன கிடைத்து விட போகிறது என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
"நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்று பெயர் மாற்றம் செய்து நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள்? கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ்-க்கு ராஜ்யசபா என்ற பெயரை மாற்றியதன் மூலம் நீங்கள் அடைந்த பயன் என்ன? குடியரசு தலைவரை ராஷ்டிரபதி என பெயரை மாற்றியதன் மூலம் உங்களுக்கு என்ன பயன்? 'நீங்கள் எதை இழந்திருக்கிறீர்கள்?" என பதில் கேள்வி கேட்டு திணறடித்தார் அண்ணா.
பெயர் மாற்றம்
இதன் பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்த திமுக, 1967 ம் ஆண்டு, ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அதன் பின் 1968 நவம்பர் 23 ம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் அது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தன. அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலம் உருவான தினத்தை மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. அதன்படி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடடுவதென கடந்த 2019 ம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால், 2022 ம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தினத்தை மாநில தினமாக கொண்டாட முடிவு செய்து, மாநில தினமாக அறிவித்தது. நவம்பர் 1 ம் தேதி எல்லை போராட்டத்தை தான் நினைவு கூறும் தவிர தமிழ்நாடு நாளை கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.