கோவை கார் குண்டுவெடிப்பில் சம்மந்தமா..? என்.ஐ.ஏ சோதனை...பின்னணி என்ன..?
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்.ஐ.ஏ அதிகாரிகள்
சோதனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி தமிழகத்தின் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை பிரிவு எனப்படும் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 5 மணிக்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ரசாலிபுரம் தெருவை சேர்ந்த 25 வயதாகும் முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிரடி சோதனையை மேற்கொண்டது.
பின்னணி என்ன..?
சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் முகமது இத்ரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் ஜி.எம்.நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உட்பட 22 இடங்களிலும் சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீடு உட்பட மொத்தம் 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.