வெயில் காலத்தில் ஏன் நுங்கு சாப்பிட வேண்டும் தெரியுமா?
தமிழ்நாட்டில் தேசிய மரமாக பனைமரம் இருக்கிறது. பிற மரங்களை விட இந்த பனைமரம் நமக்கு நிறைய பலன்களை கொடுக்கக் கூடியது. அதாவது ஒரு பனைமரம் இருந்தால் அதை சுற்றி பல்வேறு உயிரினங்கள் வாழத் தொடங்கும் என்பது உயிரியல் ஆய்வாளர்களின் கருத்துகளாகும்.
காரணம் பனைமரத்தை நம்பி பல்வேறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. அப்படியாக கோடை காலத்தில் பனைமரம் தருகின்ற நுங்கு நமக்கு பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கோடை வெயில் தாங்கி மனித உடல் குளிர்ச்சி அடைய நுங்கு நமக்கு உதவியாக இருக்கிறது.
இதை நாம் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தருகின்ற வைட்டமின் சி, இரும்பு கால்சியம் துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது.
அதனால் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் இருக்கின்ற வெப்பநிலையை சமநிலை செய்கிறது. மேலும் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை தடுப்பதற்கு நுங்கு சாப்பிடுவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

மேலும் உடல் வெப்பத்தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தையும் நமக்கு மேம்படுத்துவதோடு மலச்சிக்கலை தடுக்கிறது.
குறிப்பாக நுங்கு வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு வெயிலினால் ஏற்படக்கூடிய தோல் நோய்கள் போன்றவையும் தடுக்க உதவுகிறது. மிக முக்கியமாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோயை நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.