ராஜபக்ச குடும்பத்தை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? - இலங்கை பாதுகாப்பு செயலாளர் தகவல்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெறுக்கடிக்கு ராஜபக்ச அரசு தான் காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என மக்கள் போராடி வருவதால் இந்த அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச நேற்று முந்தினம் விலகினார்.
இதற்கிடையில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச நேற்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.
Namal Rajapaksha and his family members leave COLOMBO by helicopter from Police Park .
— Suresh Kumar (@journsuresh) May 10, 2022
#SriLanka #SriLankaCrisis #SriLankaprotest #SriLankaEconomicCrisis #Rajapaksas #NAMALRAJAPAKSA pic.twitter.com/2Mu5v9GNlv
இலங்கையில் உள்ள படை முகாமில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் நேற்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தை திருகோணமலைக்கு அழைத்து சென்றது குறித்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே விளக்கமளித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தாக்கப்பட்டதால் அவரை பாதுகாக்கவே திருகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றோம். இலங்கையில் நிலைமை சீரானதும், மகிந்த ராஜபக்சே அவர் விரும்பும் இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்”,என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு இலங்கை ராணுவத் தளபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.