ஆசையாய் அழைத்த டிரம்ப்; சந்திக்க மறுத்த மோடி - என்ன காரணம்?
அமெரிக்கா சென்ற மோடி டிரம்பை சந்திக்க மறுத்தது குறித்து காரணம் வெளியாகியுள்ளது.
மோடி அமெரிக்க பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு குவாட் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இதன் பின் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்த மோடி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மற்றும் உலக அளவில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து உரையாடினர்.
இதன் பின் நியூயார்க்கில் நடைபெற்ற 'மோடியும் அமெரிக்காவும்' நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரை மத்தியில் உரையாற்றினார். அதன் பிறகு கூகிள்(Google), ஐபிஎம்(IBM), அசெஞ்சர்(Accenture), அடோப்(Adobe) போன்ற பெரு நிறுவனங்களின் நிறுவன சிஇஓ க்களை சந்தித்து பேசினார்.
சந்திக்க விரும்பிய டிரம்ப்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் களமிறங்கும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மிச்சிகனில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்க வரும் அவரை நான் சந்திப்பேன்" என தெரிவித்திருந்தார்.
புறக்கணித்த மோடி
இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, டிரம்பை சந்திக்காமல் அமெரிக்காவிலிருந்து கிளம்பி விட்டார்.
மோடியின் பயணத்திட்டம் முன்னேற தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்டாலும் அமெரிக்க தேர்தலை மனதில் வைத்தே மோடி இந்த சந்திப்பை தவிர்த்தார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் ஏராளமான இந்திய வம்சாவளியினர் அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கும் கமலா ஹாரிஸுக்கு ஏற்கனவே ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் மோடியை சந்திப்பதன் மூலம் இந்திய வம்சாவளியினரை தன் பக்கம் ஈர்க்கலாம் என கருதி டிரம்ப் மோடிக்கு அழைப்பு விடுத்தார். தேர்தலுக்கு சில வாரமே உள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி ஒரு வேட்பாளரை சந்திப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சந்திப்பு நிகழவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.