விராட் கோலியின் மாஸ்டர் பிளான் - நியூசிலாந்து சிக்கியதன் பின்னணி இதுதான்..!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

டிசம்பர் 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விராட் கோலி ஃபாலோ ஆன் தராமல் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

மும்பை டெஸ்ட்டில் இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ளது. தற்போதே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதில் மூன்றாவது அல்லது 4வது நாள் ஆட்டம் எல்லாம் பேட்டிங் செய்வதே கடினமாகும். இதனால் கடைசியாக பேட்டிங் செய்வதை தவிர்க்க கோலி ஃபாலோ ஆன் தராமல் மீண்டும் விளையாடினார். 

அதேசமயம் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு 110 ஓவர்கள் வீசியுள்ளனர். ஆனால் இந்திய அணியோ 28ஓவர் தான் வீசியது. இதனால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வே இல்லாமல் உள்ள நிலையில், மீண்டும் பந்துவீசுங்கள் என்று கூறினால், அவர்களால் களத்தில் நிற்பதே கஷ்டமாகும்.

புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்க தொடருக்கு மனதளவில் தயாராக இருக்கவே மீண்டும் பேட்டிங் செய்ய இந்தியா தேர்ந்து எடுத்தது. இதுவே ஃபாலோ ஆன் கொடுத்து இருந்தால் இந்தியாவுக்கு மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்