ஆண்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண் - அன்புமணி ராமதாஸ் கேள்வி!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தடுமாறுவது ஏன் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளம்பெண் தற்கொலை
சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியரான பவானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர் பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த நிலையில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தன்னிடம் இருந்த 20 சவரன் நகையை விற்றும், சகோதரியிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும் ரம்மி விளையாடியுள்ளார்.

இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கடன் வாங்கிய 30 லட்சம் ரூபாயை திருப்பி அடைக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளான பவானி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் அறிக்கை
இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும்'' என்று கூறியிருந்தார். அதை வரவேற்று அடுத்த நாள் அறிக்கை வெளியிட்டேன். சட்ட அமைச்சர் ரகுபதி,'' ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்.

அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று விளக்க மளித்துள்ளார். ஓர் அமைச்சர் ஒரு நிலைப்பாட்டையும், இன்னொரு அமைச்சர் இன்னொரு நிலைப்பாட்டையும் தெரிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.
இது சரியல்ல. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றதற்கும், ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் காரணம் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த வலிமையற்ற சட்டம் தான் என்பதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சட்ட அமைச்சர் ரகுபதி வரை பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை தமிழக அரசும் மறுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனரே காணொலி மூலம் மக்களை எச்சரித்திருக்கிறார். இத்தகைய சூழலில் உடனடியாக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கனிடமிருந்து மக்களைக் காக்கும்.
மாறாக, உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரிக்கப்படும் என்றே தெரியாத மேல்முறையீட்டை நம்பிக் கொண்டிருப்பது ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் அத்து மீறல்களை அனுமதிப்பதற்கு சமமானதாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.