ஓசூர் மறியலில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? - விளக்கம் கொடுத்த எஸ்.பி
இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விளக்கம் கொடுத்துள்ளார்.
மறியல் போராட்டம் நடத்திய இளைஞர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன.
அப்போது அங்கு வந்த போலீசார் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவே கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் ஓசூர் முழுவதும் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 15 கிமீ துாரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு நின்ற அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்?
இந்த நிலையில் சம்பவத்தன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சரோஜ்குமார் தாகூர் இளைஞர் ஒருவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சரோஜ்குமார் தாகூர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பிடித்து விசாரித்தோம். விசாரணையின் போது தப்ப முயன்றதால் இளைஞரிடம் அப்படி நடந்து கொள்ள நேரிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.