தமிழகத்தில் பிரதமர் மோடி மாஸ்டர் பிளான் - உண்மை உடைத்த ஜே.பி. நட்டா
தமிழ்நாட்டில் பாஜக அலுவலகங்கள் அமைக்கப்படுவதன் ரகசியத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வித்யாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தையும் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, தமிழகம் புனிதமான பூமியாகும். இது தான் நம்முடைய தமிழ் கலாசாரத்துக்கு அடையாளமாக விளங்கும் கூடிய திருவள்ளுவர் இருந்த பூமி. இந்த பூமியை நான் வணங்குகிறேன். தமிழகம் பக்தி நிறைந்த பூமியாகும். இந்த நாடு பக்திக்கும், கலாச்சாரத்துக்கும் உதாரணமாக இருக்கிறது. இந்த நாளில் திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் பாஜக மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பணி என்பது சீராக கட்டமைக்கப்பட்ட பணியாகும். சித்தாந்த ரீதியாக நம்முடைய பணிகள் நடைபெற இந்த அலுவலகங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும். பொதுவாக கட்சி அலுவலகங்கள் எல்லாம் தலைவர்களின் வீடுகளில் இருந்து செயல்படும். அந்த கட்டிடங்கள் அந்த தலைவர்கள் போனதற்கு பின்பாக காணாமல் போய்விடும்.
ஆனால் நம்முடைய அலுவலகம் என்பது காலம் காலமாக கட்சியின் தொண்டர்கள் இருந்து பணியாற்றுவதற்காக மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் இடமாகவும் இருக்கும். வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் , தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும். தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.
கொரோனா காலத்தில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்காமல் செய்தது திமுக. பாஜக போராட்டத்திற்கு பிறகு தான் அனுமதித்தது. கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தவர் மோடி தான்.
மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பாஜகவுக்கு அலுவலகம் வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.