நடிகை செய்த காரியம்; வேதனையில் சினிமாவை விட்டே போன 'சிவக்குமார்' - போட்டுடைத்த பிரபலம்!
இயக்குநரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், சிவக்குமார் ஏன் சினிமாவை விட்டு விலகினார் என்பது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவக்குமார்
காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். இவர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை ஆவார். தொடர்ந்து திருமால் பெருமை, ஆண்பிள்ளை சிங்கம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
தமிழ் திரையுலகில் எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு நடிகராக சிவக்குமார் இன்றளவும் இருந்து வருகிறார். 1991ம் ஆண்டு முதல் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார் சிவக்குமார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் இனைந்து நடித்துள்ளார்.
இதனையடுத்து சில சீரியல்களிலும் நடித்தார். நடிகர் அஜித்தின் பூவெல்லாம் உன்வாசம் என்ற படத்தில்தான் சிவக்குமார் கடைசியாக நடித்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், சிவக்குமார் ஏன் சினிமாவை விட்டு விலகினார் என்பது குறித்து பேசியுள்ளார்.
ஏன் விலகினார்?
அவர் பேசியதாவது "ஒரு நாள் சிவகுமார் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது, ஷாட்டில் உணர்ச்சிவசமாக ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே சீரியலில் நடித்த ஒரு துணை நடிகை சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசிய சத்தம் சிவக்குமார் ஷாட்டுக்கு இடையூறாக இருந்துள்ளது. அப்போது சிவக்குமார் "என்னம்மா நான் இங்க டயலாக் பேசிகிட்டு இருக்கேன். நீ இப்படி சத்தமா போன்ல பேசிட்டிருக்க" என்று அந்த நடிகையிடம் கூறினார். அதற்கு அந்த நடிகை "என்ன சார் இப்படி பண்றீங்க. இத்தன வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க. எப்படியும் டப்பிங் பேச போறீங்க. டப்பிங்ல பாத்துக்கங்க" என்று கூறியுள்ளார்.
பின்னர் அதே சத்தத்துடன் போனில் பேச தொடங்கியுள்ளார். அப்போது, அன்றைய கால சினிமா எப்படி இருந்தது, இன்றைய சினிமா எப்படி இருக்கிறது.. என்று இதற்கு மேலும் நாம் நடிக்கணுமா என யோசித்த சிவக்குமார். இனி சினிமாவிலும், சீரியலிலும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து விலகினார்" என்று சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார்.