சங்கர் ஜிவால் Vs ஏ.கே.விஸ்வநாதன் - தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய டிஜிபி தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு
தமிழக காவல்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஆர்வமாகக் காத்திருக்கும் முயற்சி செய்யும் பல பேருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு.
1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2019-ல் ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2021-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த டிஜிபி யார்?
புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் உள்பட 10 பேர் உள்ளனர்.
இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்யப்படுகின்றனர். தற்போதைய நிலையில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் இரண்டு இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளனர்.
வரும் 30-ம் தேதி சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையால் அரசு விடுமுறை.
எனவே, வரும் 28-ம் தேதி, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியின் பெயர் வெளியிடப்பட உள்ளது.