உடலுறவு கொள்வதால் பரவும் குரங்கம்மை - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உடலுறவு கொள்வதால் குரங்கம்மை நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், பாலுறவு கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
குரங்கம்மை
கொரோனா தொற்றை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் 3 பேருக்கும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடலுறவு கொள்வதால் குரங்கம்மை நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், பாலுறவு கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உடலுறவு
இந்த குரங்கம்மை நோய், தோலோடு தோல் தொடுவதன் மூலம் பரவுவதாகவும், நோய் தாக்கம் உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிக்கும் போது பரவுவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், உடலுறவு கொள்வதன் மூலம்தான் அதிகளவில் குரங்கம்மை நோய் பரவுவதாக வெளியாகியுள்ளதாகவும், வேறு எந்த வகைகளிலெல்லாம் பரவுகிறது என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிகுறிகள்
ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது.
பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது. அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும்.
ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.
பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும்.
எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.