143 பேரை பலி கொண்ட மர்ம நோய் - 1 மாதமாக நோய் பற்றி கண்டறிய முடியாமல் திணறும் WHO
ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நோய் பற்றி கண்டறிய முடியாமல் WHO அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
காங்கோ
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை கூட ஒரு வாரத்தில் அது ஒரு வைரஸ் என உலக சுகாதார மைய,ம் கண்டறிந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸின் குணாதிசயங்கள் எல்லாம் வெளியிடப்பட்டது.
ஆனால் ஆப்பிரிக்காவில் பெரிய நாடுகளின் ஒன்றான காங்கோவில் ஒரு மாதமாகியும் பரவி வரும் மர்ம நோய் குறித்த விவரங்களை கண்டறிய முடியாமல் உலக சுகாதார மையம் திணறி வருகிறது.
143 பேர் பலி
தற்போது வரை அந்த நோயின் அறிகுறி தவிர வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோயால் 143 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா தெரிவித்து உள்ளார்.
அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு நடைபெற்று வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்றும், மருந்து எடுத்தாலும் சிலருக்கு குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
WHO விளக்கம்
காங்கோவில் தீவிரமாக பரவி வரும் கண்டறியப்படாத இந்த நோய் குறித்த விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையம்(WHO) வெளியிட்டுள்ளது. 406 பேருக்கு சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்பு உள்ளதாக பதிவாகி உள்ளது.143 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பான்மையாக குழந்தைகளை தாக்கியுள்ள இந்த நோய், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களை அதிகம் தாக்கி உள்ளது. அக்டோபர் 24 அன்று முதல் கேஸ் பதிவான நிலையில், நவம்பர் தொடக்கத்தில் கேஸ்கள் உச்சத்தை எட்டி, தற்போதும் பரவி வருகிறது.
உணவில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது, பொதுவான நோய்களுக்குக் கூட சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாதது, சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவை இந்த நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார மையம் கருதுகிறது.