தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளதா?
தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. ` மத்திய தொகுப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் இல்லை' என்கிறார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியாநிறுவனம் கோவிஷீல்டு எனும் பெயரில் தயாரித்து வருகிறது.
இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசிகள், சந்தையில் போலியாக வலம் வருவதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "கோவிஷீல்டு தடுப்பூசியின் போலி தயாரிப்புகளை இந்தியா மற்றும் உகாண்டாவில் நோயாளிகள் மட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தடுப்பூசி உற்பத்தியாளர்களும் சரிபார்த்துள்ளனர். இந்தத் தயாரிப்புகள் போலியானவை என சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தடுப்பூசி மருந்துகளில் கலவை, அடையாளம், தவறான சித்தரிப்பு ஆகியவற்றின் மூலம் இவை அடையாளம் காணப்பட்டுள்ளன."
"இந்தத் தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதிகள் பொய்யானவையாக உள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசி 2 மில்லி அளவிலான குப்பியாக தயார் செய்யப்படவில்லை. இதனை 4 டோஸ்கள் அடங்கிய குப்பியாகத்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகளால் பொது சுகாதாரத்துக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும். இதனை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டிய அவசியமான ஒன்றாகும். தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற விநியோகஸ்தர்களிடம் இருந்தே பெறப்பட வேண்டும். மருந்துகளில் தயாரிப்புத்தன்மை, உள்ளடக்கம் ஆகியவையும் சரிபார்க்கப்பட வேண்டும்," எனத் தெரிவித்திருந்தது.
இந்திய மருந்து சந்தையில் போலி தடுப்பூசிகள் வலம் வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், `` தமிழ்நாட்டில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கோயம்புத்தூர், சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் தொற்று கண்டறியப்படும் விகிதம் 1 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நம்மிடம் தடுப்பூசிகள் அதிகளவு உள்ளன. அதேநேரம், மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது," என்கிறார்.
தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், `` சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு தேடிச் சென்று தடுப்பூசிகளை செலுத்த இருக்கிறோம். இரண்டாம் தவணையாக போட வேண்டிய தடுப்பூசியில் கோவிஷீல்டை 10 லட்சம் பேரும் கோவேக்சினை மூன்றரை லட்சம் பேரும் செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதால் நோயின் வீரியம் குறைவாக உள்ளது" என்றார்.
மேலும், போலி தடுப்பூசிகளின் பரவல் குறித்துப் பேசியவர், `` மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தடுப்பூசிகளை பெற்று வருகிறோம். தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. இந்தியாவில் மகாராஷ்ட்ரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் போலியான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில்தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.