DSP முதல் DIG வரை காக்கி சட்டையில் கம்பீரமாக வலம் வந்த விஜயகுமார் - யார் இவர்?

Coimbatore Tamil Nadu Police Death
By Thahir Jul 07, 2023 11:33 AM GMT
Report

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்று விடாமுயற்சியால் காவல்துறை உயர் அதிகாரியாக உயர்ந்த விஜயகுமார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

விடாமுயற்சியால் முன்னேறியவர் 

தேனி மாவட்டம் அரண்மனை புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் மனைவி ராஜாத்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இந்த தம்பதியின் மகன் தான் விஜயகுமார் இவருக்கு பிரேமலதா, நிர்மலா என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

இவர் அரசு பள்ளியில் ஒன்று முதல் 6 ஆம் வகுப்பு வரை அணைக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பயின்றார்.

பின்னர் பெற்றோர் தேனிக்கு குடிபெயர்ந்த நிலையில் தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் ஸ்ரீராம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் உயர்கல்வி பயின்றார். பின்னர் 2003 ஆம் ஆண்டு குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையில் டிஎஸ்பி (DSP) பணியில் சேர்ந்தார்.

DSP முதல் DIG வரை காக்கி சட்டையில் கம்பீரமாக வலம் வந்த விஜயகுமார் - யார் இவர்? | Who Is This Vijayakumar Ips

தொடர்ந்து உயர் இலக்கை அடைய தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து காஞ்சிபுரம், கடலுார், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

திருமணம்

விஜயகுமார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான பல் மருத்துவர் கீதா வாணியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நந்திதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

திறமையான காவல்துறை அதிகாரி

சிபிசிஐடி கண்காணிப்பாளராக பணியாற்றிய போது நீட் ஆள் மாறாட்ட வழக்கு, சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ் கொலை வழக்கு, சுரானா 103 கிலோ தங்கம் மாயமான வழக்குகளை திறம்பட கையாண்டார்.

விஜயகுமார் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றிய போது அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சுமார் 40 மணி நேரத்தில் மடக்கி பிடித்து கைது செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

who is this Vijayakumar IPS

பல்வேறு சாதனைகளை படைத்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை (07.07.2023) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.விஜயகுமாருக்கு வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீரமாக பணியாற்றிய ஓர் நேர்மையான அதிகாரி திடீரென இது போன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)