அரசியல்வாதியும், அதிரடி நாயகனுமான கேப்டன் விஜயகாந்தின் ஒரு பக்கம்...!
நடிகர், சமூக ஆர்வலர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகங்களை கொண்ட கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று. சிம்மக் குரலுக்கு சொந்தமான விஜயகாந்தின் வாழ்க்கை பக்கத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
குழந்தை மற்றும் பள்ளி பருவம்:
விஜயகாந்த் மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ல் பிறந்தார். விஜயகாந்த் என்றழைக்கப்படும் இவரின் இயற்பெயர் நாராயண விஜயராஜ் அழகர்சாமி என்பதாகும்.

விஜயகாந்த் தனது பள்ளி படிப்பை மதுரையிலுள்ள நாடார் மேல் நிலை பள்ளியில் படித்தார். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, விஜயகாந்த் தனது பள்ளி படிப்பை 10 ஆம் வகுப்போடு முடித்துக்கொண்டார். இதன் பின்னர் தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார்.
திரைப்படத்தில் ஜொலிக்க தொடங்கிய கேப்டன்:
சினிமாவில் நடித்தாக வேண்டும் என்ற மன உறுதியுடன் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் காஜா இயக்கிய 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் முதல் முதலாக கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தாலும் , சகா நண்பர்களின் உந்துதல் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்தார். இதனைதொடர்ந்து 1979 ஆம் ஆண்டு 'ஓம் சக்தி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதன் பின்னர் 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விஜயகாந்துக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு 100 ஆவது திரைப்படமாக அமைந்தது. அதேசமயம் இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அனைவராலும் "கேப்டன்" என்று அழைக்கப்படுகிறார்.

நடிகர் விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.
அரசியலில் ஈடுபடத்தொடங்கிய விஜயகாந்த்:
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்த விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்தார்.
அரசியல் வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிய விஜயகாந்த் தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பெற்றார்.

விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்றார்.
இதனால் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துக்கொண்டார்.
சர்ச்சை பேச்சுகள்:
அதே ஆண்டில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டதால் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி முறிந்தது.
அதன்பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகாவுடன் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தார். ஆனால் தே.மு.தி.க. போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.
2015 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் "த்தூ" என்று சொல்லி அவமரியாதையுடன் நடந்துக்கொண்டார்.
இதனை கண்ணடிக்கும் விதமாக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் பேசப்பட்டது.

தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் விஜயகாந்த் அந்த தேர்தலில் தோல்வியடைந்தது மட்டும் அல்லாமல் டெபாசிட்டையும் இழந்தார்.
உடல்நல பாதிப்பு:
கடந்த 2018 ஆம் ஆண்டில் விஜயகாந்திற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு இவரின் உடல்நிலையானது பின்னடைவை சந்தித்தது.
கேப்டன் விஜயகாந்த் சர்க்கரை குறைபாடு மற்றும் சில வயோதிக சார்ந்த பிரச்னை காரணமாக அவ்வப்போது வெளிநாடுகளில் சிகிச்சைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அவரது கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போது விஜயகாந்த் தனது கட்சி அலுவலகத்தில் 118 அடி உயர கம்பத்தில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தேசிய கொடியை ஏற்றினார்.
விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள், இவருக்கு இப்படி ஒரு நிலையா? என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கம்பீரமாக இருந்த கேப்டனின் உடல்நிலை எப்போது சரியாகும்? என்ற கேள்வியுடன் அவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil