சைக்கிள் கடை to சட்டமன்ற உறுப்பினர் - யார் இந்த தி நகர் சத்யா..? திடீர் ரைடு ஏன்..?
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த திநகர் சத்யா..?
சத்ய நாராயணன் என்கிற திநகர் சத்யா ஆந்திராவை பூர்வீகமாக கொண்டபோதிலும் சென்னை தி நகரில் வசித்து வருகிறார். தனது வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் சைக்கிள் கடை வியாபாரம், சி டி விற்பனை, பால் வியாபாரம் போன்றவற்றை செய்துவந்துள்ள சத்யா, 1991-96 ஆம் ஆண்டுகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அறிமுக பெற்றார். அதன் காரணமாக சென்னை திநகரின் பகுதி செயலாளர் பதவியை பெற்றார்.
சென்னை மாநகராட்சியின் 2011 - 16 ஆம் ஆண்டு வரை 130 வார்டு கவுன்சிலராக இருந்த திநகர் சத்யா, 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தி நகர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து தான் தி.நகர் சத்யா, பொதுப்பணித்துறையில் காண்ட்ராக்டர் எடுக்கும் வேலையை செய்து வந்திருக்கிறார். தனது தொழில்களை ஆந்திராவின் திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் அதிகப்படியாக மேற்கொண்ட சத்யா, தமிழகத்தின் சென்னை, விழுப்புரம் பகுதிகளில் டாஸ்மார்க் பார்களையும் நடத்த துவங்கினார்.
லஞ்சஒழிப்பு துறை சோதனை ஏன்..?
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என தெரிவித்திருந்தார். ஆனால் இதனை எதிர்த்து சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்த்தக்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
இதனையடுத்து இரண்டு மாத காலத்தில் தி நகர் சத்யா தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாகத்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.