யார் இந்த 86 வயது வத்தல் வியாபாரி - முதல்வரே பாராட்டும் வியக்கவைக்கும் சாதனைகள்
மதுரையை சேர்ந்த வத்தல் வியாபாரியான ராஜேந்திரனை நேரில் சந்தித்து முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டியதனை தொடர்ந்து, அவரை பற்றிய தேடுதல் அதிகரித்துள்ளது.
பாராட்டிய முக ஸ்டாலின்
இன்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரையை சேர்ந்த வத்தல் வியாபாரியான 86 வயது ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டி, சால்வை அணிவித்து அவருக்கு கலைஞரின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார் என்று பதிவிடப்பட்ட அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.
ராஜேந்திரனின் சாதனைகள்
மதுரை மாவட்டத்தின் தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சொந்தமாக ஆலை வைத்திருக்கும் அதன் மூலம் வத்தல், மோர் மிளகாய், வடகம் போன்றவற்றை தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார். விருதுநகரை பூர்விகமாக கொண்ட ராஜேந்திரன், முன்னர் அதே பகுதியில் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
போதுமான வருமானம் இல்லாத காரணத்தால், 1951-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 300 ரூபாயை வைத்து கொண்டு மதுரைக்கு வந்துள்ளார். பின்னர், அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார். அவ்வாறு உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இவரின் தொழிலில் தற்போது இவரிடம் 40 ஊழியர்கள் பணியாற்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.
கல்வி வள்ளல்
தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தில், ராஜேந்திரன் கல்விப் பணிக்காக நிறைய உதவிகளை செய்து கொடுத்து வருகிறார். மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்துள்ளார் ராஜேந்திரன். இவரின் இந்த பணிகளை பாராட்டி தான் முதல்வர் சிறப்பித்துள்ளார்.