உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் - சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரியா?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதனுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யப்பிரத சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாக விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறை சேர்க்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மின்வாரியத் துறை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே கணித்தப்படி பிரதீப் யாதவ் ஐஏஎஸ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் யாதவ், 1992 தமிழ்நாடு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
பிரதீப் யாதவ்
திண்டுக்கல்லில் பயிற்சி ஆட்சியராக தனது ஐஏஎஸ் வாழ்க்கையை தொடங்கிய பிரதீப் யாதவ், வருவாய்த்துறை, தொழில்துறை, சமூக நீதி, மனிதவள மேம்பாடு என துறைகளின் துணை செயலாளராக பணியாற்றியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய போது ஐந்து முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் சர்ச்சைக்கு உள்ளானார்.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்த போது சிறை தண்டனை மற்றும் அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்குப் பிறகு கைத்தறி துறை முதன்மை செயலாளர், மின்சார துறை நிர்வாக இயக்குனர், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் ஆகிய பல துறைகளில் பணியாற்றியவர், தற்போது துணை முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.