ஏழை நாடுகளுக்கு 25 கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே கிடைத்துள்ளது: WHO தலைவர்
கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து வழங்கப்பட தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏழை நாடுகளுக்கு 25 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கவலை தெரிவித்துள்ளார்.அதே சமயம் பணக்கார நாடுகளில் தற்போது வரை கிட்டத்தட்ட நான்கு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஏழை நாடுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும், “தன் நாட்டு மக்களுக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் உலக நாடுகள் செயல்பட்டால் அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக கொரோனா தடுப்பு மருந்தை பிரித்து வழங்க முன்னெடுத்த முயற்சிகளும் தற்போது தோல்வியைச் சந்தித்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பணக்கார நாடுகள் தங்களுடைய தேவைக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.