தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றி: தலைவர் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
விசில் சின்னம்
இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம தொடங்கியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.எனக் குறிப்பிட்டுள்ளார்.