சென்னை அணி செய்துள்ள மோசமான சாதனை - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான சாதனையை நோக்கி பயணப்பட்டு வருவதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் இதுவரை 47 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மும்பை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் எப்படியாவது அடுத்த சுற்று செல்லவோ அல்லது புள்ளிப்பட்டியலில் கௌரவமான இடத்தை பெறவோ பிற அணிகள் அனைத்தும் போட்டி போட்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
ஆனால் இந்த தொடர் முழுவதுமே அனைத்து அணிகளுடைய பீல்டிங்கும் சுமாராக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் அதிக அளவில் அனைத்து அணிகளும் கேட்ச்களை தவறவிட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டியில் கூட சென்னை அணியை சேர்ந்த வீரர்கள் கேட்ச்களை எளிதாக கோட்டை விட்டனர். அதன் காரணமாகவே விரைவாக ஜெயிக்க வேண்டிய போட்டியில் சென்னை தட்டுதடுமாறி வென்றது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி எது? என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதில் நடப்பு சாம்பியனான சென்னை இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டிகளில் 19 கேட்ச்களை தவற விட்டுள்ளது. தொடர்ந்து டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா 15 கேட்ச்களை தவறவிட்டு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம் அதிக கேட்ச்களை பிடித்த தனிப்பட்ட வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணியை சேர்ந்த ரியான் பராக் பெற்றுள்ளார். இப்படியே சென்றால் சென்னை அணி என்னவாகும் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.