தலைமறைவாகியிருக்கும் தலிபான் தலைவர் - உயிரோடு இருக்கிறாரா? விலகும் மர்மங்கள்!
ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கடந்த 15-ம் தேதி கைப்பற்றும்வரை அவர்களது செயல்பாடுகள் ரகசியமாகவே இருந்து வந்தது. ஆனால் காபூலை கைப்பற்றிய பிறகு அந்த அமைப்பினர் வெளியுலகிற்கு பிரபலமாகவே ஆனர்.
தலிபான்களின் குரலான இருந்து கருத்துகளை வெளியிட்டு வந்த செய்தி தொடர்பாளர், ஜபிஹுல்லா முஜாஹித்தை கூட அதுவரை யாரும் நேரில் பார்த்ததில்லை. அவர் உண்மையிலேயே ஒரே நபரா, அல்லது அந்த ஒற்றை பெயரில் பலர் பேசி வந்தனரா என்று தெரியாமல் ஊடகங்கள் குழம்பி வந்தன.

ஆனால், காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு செய்தியாளர்கள் முன் ஜபிஹுல்லா முஜாஹித் தோன்றி வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்தார்.
அவரை போலவே, ஆப்கனின் அடுத்த அதிபராக பொறுப்பேற்றார் என்று எதிர்பார்க்கப்படும் முல்லா பரதாரும் காபூல் வந்து, அமெரிக்க உளவுத்துறை தலைவர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தலிபான்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால், ஒரே ஒருவர்தான் எங்கே இருக்கிறார் என்பது கூட இன்னும் தெரியாமல் உள்ளது.

அவர்தான் தலிபான் அமைப்பின் உச்சநிலை தலைவர் ஹபிதுல்லா அகுண்ட்ஸாதா. காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்ததிலிருந்தே அவர் அந்த நகருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரது படத்தை மட்டுமே வெளியிட்டுள்ள தாலிபான் அமைப்பினர், அவரது இருப்பிடம் குறித்தோ அவர் எப்போது வருவார் என்பது குறித்தோ தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர். தலிபான் அமைப்பின் உச்சநிலை தலைவராக இருந்தும், இதுவரை ஒருமுறை கூட ஹபிதுல்லா அகுண்ட்ஸாதா பொதுவெளியில் தோன்றியதில்லை.
அவரது அன்றாட நடவடிக்கை தொடர்ந்து ரகசியமாகவே இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில் அவரை பற்றி செய்தியாளர்கள் கேட்டால், ஆண்டவன் அருளால் விரைவில் அவரை நீங்கள் பார்க்கலாம் என்று மட்டும் பதில் வருகிறது.
உண்மையில் தலிபான் அமைப்பை தோற்றுவித்த அக்தர் முகமது மன்சூரும் இதே போல் பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். தன்னை தேடி வந்தவர்களை கூட அவர் நேரில் சந்தித்ததில்லையாம். அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அக்தர் முகமதுமன்சூர் கொல்லைப்பட்டதை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டில் தலிபான் அமைப்பின் தலைமை பொறுப்பை ஹபிதுல்லா அகுண்ட்ஸாதா ஏற்றார்.

ஆனால் அதற்கு பிறகு அவர் வெளியுலகுக்கு ஒரு முறை கூட தலை காட்டவில்லை. அவரது ஒரே ஒரு புகைப்படத்தை தவிர்த்து வேறும் எதுவும் ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை.
இப்போது தலிபான்களின் வெற்றிக்கு பிறகும் அவரது மர்மம் நீடித்து வருவதால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஹபிதுல்லா அகுண்ட்ஸதா மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சிலர் அமெரிக்க தாக்குதலில் அவர் எப்போதோ உயிரிழந்துவிட்டதாகவும் பல கதைகளை கிளப்பி வருகின்றனர்.
வெளிநாட்டு படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கான கெடு வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதால் தலிபான்களின் தலைவர் குறித்த மர்மம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.