ஃபைசர் தடுப்பூசி எப்போது இந்தியாவுக்கு வரும்?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவத்தை நிகழ்த்திவிட்டது. கொரோனா பாதிப்புகளும் மரணங்களும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டின.
தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்தாலும் தினசரி கொரோனா மரணங்கள் தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றே அடுத்தகட்ட கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தீர்வாக உள்ளது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே போதாது என்பதால் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி வழங்க கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. மேலும் மாநில அரசுகளே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும் விதிகளை தளர்த்தியது.
ஆனால் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி விற்க முடியாது என்றும் நேரடியாக மத்திய அரசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் ஃபைசர் நிறுவனம் இந்த ஆண்டு முழுவதற்கும் அவர்களுக்கு ஆர்டர் இருப்பதாக தெரிவித்துவிட்டன. அடுத்த ஆண்டு தான் இந்தியாவுக்கு அதிக அளவில் தடுப்பூசி விநியோகம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளன.
மேலும் தற்காலிகமாக தடுப்பூசிகளை விநியோகம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஃபைசர் நிறுவனம் ஒரு சில விதிகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசு கவனத்துடன் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அனுமதி கிடைத்தால் ஜூலை மாதத்தில் ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஃபைசர் தடுப்பூசி 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.