ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து....காலவரையறையிட்டு சொல்ல முடியாது...மத்திய அரசு
ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த பிரிவு 370 சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகின்றது.
இந்த வழக்கில், பிரிவு 370 ஏன் நீக்கப்பட்டது என்றும் அதற்கான நோக்கம் என்ன போன்ற காரணங்களை கேட்டு மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். தலைமை நீதிபதியின் கேள்விக்கு தற்போது மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
காலவரையறையிட்டு சொல்ல முடியாது
பிரிவு 370 நீக்கப்பட்ட 2018 முதல் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்கள் 45.2% குறைந்துள்ளது என்றும் கற்களை வீசுவது, அசம்பாவித சம்பவங்கள் நடத்துவது உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் 97 சதவீதம் வரை குறைந்துள்ளது என மத்திய அரசு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 65 சதவீதம் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டி, தீவிரவாதிகளிடம் சென்று சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற்று மாநிலத்தில் செட்டில் ஆகி வருகிறார்கள் என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் பிரிவு 370 நீக்கியதால் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்தவும் தாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ள மத்திய அரசு, முதலில் பஞ்சாயத்து அளவிலான தேர்தல்கள் நடத்தப்பட்ட பிறகு மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன் அதற்காக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது என்றும் ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையறையிட்டு சொல்ல முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.