Whatsapp, Zoom செயலிகளுக்கு மத்திய அரசு வைத்த செக் .. சேவைகளை தொட இனி இது முக்கியம்

WhatsApp
By Irumporai Sep 23, 2022 03:32 AM GMT
Report

கால்லிங் மற்றும் மெசேஜ் சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ்அப், ஜூம், ஸ்கைப், கூகுள் டியோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவைகளை இந்தியாவில் தொடர உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மசோதா 2022, வரைவின்படி உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வரைவு மசோதாவில் தொலைத்தொடர்பு சேவையின் ஓர் அங்கமாக OTT செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

உரிமம் அவசியம்

தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை பெறுவதற்கு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குனர்களின் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்வதற்கான விதியையும் அரசு முன்மொழிந்துள்ளது.

தொலைத்தொடர்பு அல்லது இணைய வழங்குநர் தனது உரிமத்தை ஒப்படைத்தால், கட்டணத்தைத் திரும்பப் பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

மத்திய அமைச்சர் தகவல்

தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வரைவின் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 20 கடைசி நாள் ஆகும். இருப்பினும், எந்தவொரு பொது அவசரநிலையின் போதும் அல்லது இந்தியாவின் பொது பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு அல்லது குற்றத்தைத் தூண்டுவதைத் தடுப்பதற்காக விலக்கு அளிக்கப்படாது என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.