பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம்- தமிழக அரசின் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் இனி சான்றிதழ்களை பெற அரசு அலுவலகங்களை தேடிச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே 50க்கும் அதிகமான அரசு சேவைகளை பெறலாம்.
அதன்படி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வெளியிட்ட அறிக்கை..,
தமிழகத்தில் குடிமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) “நம்ம அரசு” என்ற வாட்சப் சாட்பாட் சேவையை உமாஜின் 2026 தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜனவரி 8, 2026 அன்று இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், +91 78452 52525 என்ற வாட்சப் எண்ணின் மூலம் அரசு சேவைகளை எளிதாகப் பெற முடியும்.
முதற்கட்டமாக 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் வாட்சப் வழியாக வழங்கப்படுகின்றன.

AI தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டணம் செலுத்தும் முறை ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தளத்தை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும், 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களிலும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக இதில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துதல். மின்சாரக் கட்டணம் செலுத்துதல், பட்டா சிட்டா விவரங்கள் பெறுதல், குடும்ப அட்டை சேவைகள் போன்ற சேவைகள் உள்ளன.
அரசு சேவைகளை எளிமையாக வழங்குவதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விரிவான டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த "நம்ம அரசு" முன்னெடுப்பு அமைந்துள்ளது.
இந்த தளத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகள் படிப்படியாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.