அடுத்திருக்கும் சட்ட வழிகள் என்னென்ன...? ஜாமீன் பெறுவாரா செந்தில் பாலாஜி..?
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுக்கப்பட்ட பிணை மனு
தற்போதைய திமுக அரசின் தமிழக மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2015-ஆம் ஆண்டு அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தியது.
அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் நீதிமன்ற காவலை வரும் 29-ஆம் தேதி வரை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தன்னுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த மனு விசாரிக்கப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை முதன்மை நீதிபதி அல்லி, இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என கூறியிருந்தார். இன்று தனது தீர்ப்பை வழங்கிய அவர், செந்தில் பாலாஜியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜிக்கு இருக்கும் வழிகள் என்னென்ன..?
இந்நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னிருக்கும் அடுத்த சட்ட வழிகள் என்னென்ன என்பதை தற்போது காணலாம். சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தான் தற்போது செந்தில் பாலாஜிக்கு பிணை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கொள் காட்டி தங்கள் தரப்பு வாதங்களை அதில் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையிட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், நீதிபதி உத்தரவிட்ட நீதிமன்ற காவல் வரும் 29-ஆம் வரை உள்ளது.
மீண்டும் 15 நாட்கள் கழித்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும் நீதிமன்ற காவல் நீடிக்கும் 9 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற முயற்சிப்பார் என்றே பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
